வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு: இது தான் பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசின் வளர்ச்சியா? - காங்கிரஸ் கடும் விமர்சனம்


வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூரு: இது தான் பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசின் வளர்ச்சியா? - காங்கிரஸ் கடும் விமர்சனம்
x

பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கிய விவகாரத்தில் இது தான் பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசின் வளர்ச்சியா? என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஹலால் இறைச்சி

பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கவில்லை. அது பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் ஊழலில் மூழ்கிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சியில் பெங்களூருவில் தவறுகள் நடந்ததாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினர். சில தனியார் நிறுவனங்களும் குறை கூறின. ஆனால் இப்போது மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அரசுக்கு கடிதம் எழுதி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பெங்களூருவை சேர்ந்த 7 மந்திரிகள் ஹலால் இறைச்சி உள்ளிட்ட விஷயங்கள் மற்றும் வீரசாவர்க்கர் குறித்து பேச ஓடோடி வருகிறார்கள். ஆனால் பெங்களூரு வெள்ளம் குறித்து அவர்கள் வாய்மூடி மவுனமாக உள்ளனர். இதுபற்றி அவர்களுக்கு 40 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டுமா?. பிரதமர் மோடி மங்களூரு வந்தபோது, இரட்டை என்ஜின் அரசால் கர்நாடகம் வளர்ந்து வருவதாக கூறினார். வெள்ளத்தில் மூழ்கிய சாலை, சாலையில் குழி போன்றவற்றால் பெங்களூருவில் ஓடும் வாகனங்களுக்கு ஒற்றை என்ஜின் போதாது, இரட்டை என்ஜின் தேவைப்படுகிறது. இது தான் பா.ஜனதா அரசின் இரட்டை என்ஜின் வளர்ச்சியா?.

ரூ.15 லட்சம் லஞ்சம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டின் மையமாக இருப்பது விதான சவுதாவே என்று காங்கிரஸ் முன்பே கூறியது. அதை நிரூபிக்கும் வகையில் பா.ஜனதாவை சேர்ந்த பசவராஜ் தடேசகுர் எம்.எல்.ஏ. தேர்வு எழுதிய ஒருவரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு விவகாரத்தில் பா.ஜனதா ஈடுபட்டு இருப்பது உறுதி.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Next Story