நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - மத்திய அரசு விளக்கம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில தினங்களாக நாட்டின் சில பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்ததால், தாமதத்திற்கு வழிவகுத்தது. மேலும், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகமானது. இது, எண்ணெய் நிறுவனங்களின் விநியோக கட்டுப்பாடுகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்தது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக உள்ளது.
எனினும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தேவை அதிகரித்திருப்பதால், உள்ளூர் மட்டத்தில் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
எண்ணெய் விநியோக நிறுவனங்கள் இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்கின்றன. அத்துடன் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளன.
சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். இந்த மாதத்தின் முதல் பாதியில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தேவை அதிகரித்துள்ளது.
இந்த மாநிலங்கள், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் அதிக அளவில் சப்ளை செய்யப்படும் மாநிலங்கள் ஆகும். அதாவது, டெர்மினல்கள் மற்றும் டெப்போக்களிலிருந்து அதிக தூரத்தில் இந்த மாநிலங்கள் உள்ளன.
இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம் கூறி உள்ளது.