இந்தியா கூட்டணி தலைவராக போட்டியின்றி தேர்வானவர் இவரா...?
கூட்டத்தில் நாங்கள் அனைவரும், சாத்தியப்பட்ட வரை, விரைவில் சீட் ஒதுக்கீடு பற்றி முடிவு செய்வோம் என்று விவாதித்தோம் என பவார் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் காணொலி கூட்டம் நேற்று நடந்தது. இதில், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை.
சீட் ஒதுக்கீடு, பாரத் ஜோடோ நியாய யாத்திரை மற்றும் பிற விவகாரங்களை மறுஆய்வு செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அனைவரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்-மந்திரி மற்றும் ஐக்கிய ஜனதா தள தேசிய தலைவரான நிதிஷ் குமார் பெயரை பரிந்துரைத்தனர்.
ஆனால், இதற்கு முன் பொறுப்பாளராக இருந்தவரே இந்த பதவியை தொடர வேண்டும் என்று கூறி, அதனை ஏற்க நிதிஷ் மறுத்து விட்டார்.
இந்த கூட்டத்தில் நாங்கள் அனைவரும், சாத்தியப்பட்ட வரை, விரைவில் சீட் ஒதுக்கீடு பற்றி முடிவு செய்வோம் என்று விவாதித்தோம். கூட்டணியை மல்லிகார்ஜுன கார்கே தலைமையேற்க வேண்டும் என சிலர் ஆலோசனை கூறினர். எல்லோரும் அதற்கு ஒப்புதல் அளித்தனர் என சரத் பவார் கூறியுள்ளார்.