வாக்காளர் பட்டியலில் முறைகேடா..? தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு... ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் பரபரப்பு
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில், வாக்களர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெரும்பாலானோரின் பெயர்கள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் என்றும், தொகுதியை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுமுறை பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தை தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பிவைத்து இருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பக்கூடிய விரிவான அறிக்கையை தலைமை அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதாகவும், விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் தொடர்ந்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.