76-வது சுதந்திர தினம் நினைவாக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்க நடவடிக்கை - ரெயில்வேதுறை தகவல்
76-வது சுதந்திர தினம் நினைவாக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வேதுறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்க ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளது. விடுதலை போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை உள்ளடக்கி இந்த பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது.
ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்டு 22-ந்தேதி புறப்படும் இந்த ரெயில், ஆமதாபாத், கேவடியா, சூரத், புனே, ஷீரடி, நாசிக், ஜான்சி ஆகிய இடங்களை பயணிகள் கண்டுகளிக்க உதவும். மேற்படி பகுதிகளில் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான முக்கியமான இடங்களை மக்கள் பார்வையிடலாம்.
இந்த பாரத் கவுரவ் ரெயிலில், முற்றிலும் ஏ.சி. வசதி உள்பட நவீன வசதிகளை கொண்ட ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 9 பகல்கள் மற்றும் 8 இரவுகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாவுக்கு குறைந்தபட்சம் நபர் ஒருவருக்கு (3 அடுக்கு ஏ.சி. பெட்டி) ரூ.31,731 வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வேத்துறை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.