அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது குறித்து விசாரணை
அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் அறிவித்துள்ளார்.
அழுகிய முட்டை வினியோகம்
கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கர்நாடக அரசு சார்பில் வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டைகள் அழுகிப்போய் இருந்தது. இதனால் மாணவ-மாணவிகள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்களுக்கு அழுகிய கெட்டுப்போன முட்டைகள் வினியோகித்ததாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
விசாரணைக்கு உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டை வினியோகம் செய்தது குறித்து எனது கவனத்திற்கும் வந்தது. கெட்டுப் போன முட்டை வினியோகம் செய்தது குறித்து புகார்களும் வந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்ட மாவட்டம் மட்டும் இல்லாமல் மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்பு, கெட்டுப் போன முட்டைகளை வினியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாத்ரு வந்தனா திட்டம்
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். எங்கு தவறு நடந்தது, எதற்காக கெட்டுப் போன முட்டைகளை வழங்கினார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டத்தை நிறுத்த முடிவு செய்யவில்லை. அந்த மையங்களை மூடும் எண்ணமும் கர்நாடக அரசிடம் இல்லை. அந்த திட்டத்திற்கு தேவையான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.