தேர்தல் முடிவில் சிக்கல் ஏற்பட்டால் தலையிட வேண்டும் - ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்


தேர்தல் முடிவில் சிக்கல் ஏற்பட்டால் தலையிட வேண்டும் - ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
x

ஜனாதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

புதுடெல்லி,

7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபகள் ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரிந்தாமன், பி.ஆரம். சிவகுமார், சி.டி. செல்வம், எஸ். விமலா மற்றும் பாட்னா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் என ஏழு முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும். ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி அடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது. பாஜக தோற்றால் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கக்கூடும். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். எந்த கூட்டணி அதிக இடங்களை பிடிக்கிறதோ, அந்த கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் தேர்தல் கமிஷன் தனது கடமையை செய்யவில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது விபரீத சூழல் ஏற்பட்டால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் வந்தால் சுமுகமாக இருக்காது. வன்முறையில் முடியும் ஆபத்து உள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story