காலிஸ்தான் பிரிவினைவாதிக்கு எதிராக இந்தியா விடுத்த ரெட் நோட்டீஸ் கோரிக்கையை திருப்பி அனுப்பிய இன்டர்போல்


காலிஸ்தான் பிரிவினைவாதிக்கு எதிராக இந்தியா விடுத்த ரெட் நோட்டீஸ் கோரிக்கையை திருப்பி அனுப்பிய இன்டர்போல்
x

கோப்புப்படம் ANI

காலிஸ்தான் பிரிவினைவாதிக்கு எதிராக இந்தியா விடுத்த ரெட் கார்னர் நோட்டீஸ் கோரிக்கையை இன்டர்போல் திருப்பி அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டில் ரெட் கார்னர் நோட்டீசுக்கான இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் திருப்பி அனுப்பியுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பு, இந்திய ஏஜென்சிகள் அளித்த அனைத்து உள்ளீடுகளையும் சமர்ப்பித்துள்ளது, ஆனால் இன்டர்போல் சில கேள்விகளை எழுப்பி அதை திருப்பி அனுப்பியுள்ளது.

இமாச்சலப்பிரதேச சட்டசபை சுவர்களில் 'காலிஸ்தான்' பேனர்கள் கட்டப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கனடாவைச் சேர்ந்த, காலிஸ்தான் சார்பு அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எப்ஜே) அமைப்பின் நிறுவனர் மற்றும் சட்ட ஆலோசகரான குர்பத்வந்த் சிங் குறிப்பிடப்பட்டார். அவரது அமைப்பு இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரியில், ஐஎஸ்ஐ செயல்பாட்டாளர்களுடன் இணைந்து மும்பை மற்றும் பிற இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டியதற்காக தேடப்படும் எஸ்எப்ஜே அமைப்பைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் முல்தானியைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்தது.

குர்பத்வந்த் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான முல்தானி, எல்லைக்கு அப்பால் இருந்து பஞ்சாபிற்கு வெடிபொருட்கள் அடங்கிய ஆயுதங்களை ஏற்பாடு செய்து அனுப்பியது கவனத்திற்கு வந்தது. இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்களின் உதவியுடன் அனுப்பப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குண்டர்கள் மற்றும் தீவிரவாதிகள் மூலம் கடத்தப்பட்ட சரக்குகளை பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் உரிமை ஆர்வலர்களைக் குறிவைத்து உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையை மதிக்காமல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக சில செய்தி அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஆனால் சர்வதேச குற்றத்தடுப்பு அமைப்பு அத்தகைய கருத்துக்களை வெளியிடாததால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story