காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் தீவிரமடையும் போராட்டம்


காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் தீவிரமடையும் போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கே.ஆர்.பேட்டையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மண்டியா:

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை தொடர்ந்து கடந்த 19-ந்தேதியில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து விவசாய அமைப்பினா், கன்னட அமைப்பினா் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று முன்தினம் மண்டியா மற்றும் மத்தூரில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

ேமலும், நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனிலும் கன்னட அமைப்பினா் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றும் அந்த போராட்டம் தொடர்ந்தது. நேற்று மண்டியாவில் விசுவேஸ்வரய்யா சிலை முன்பு மற்றும் சஞ்சய் சர்க்கிளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும் மண்டியா டவுனில் மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினா் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தமிழக அரசின் உருவபொம்மையை எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கன்னட அமைப்பினரை கைது செய்து அழைத்து சென்றனர். மற்றொரு பகுதியிலும் மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினா் மறியல் போராட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் பூமித்தாய் போஜ சமிதியினர் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர். அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் குவெம்பு சிலை முன்பு ஊர்வலமாக புறப்பட்டு மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலை வரை தீப்பந்தங்களை ஏந்தியப்படி சென்றனர்.

அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும், மாநில அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இதேபோல், காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.


Next Story