சிசு ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில் மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தை பலி


துமகூரு அருகே ஒரு சிசு ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில், மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தை பலியாகியுள்ளது. இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணுக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

துமகூரு:

துமகூரு அருகே ஒரு சிசு ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில், மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தை பலியாகியுள்ளது. இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணுக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

இரட்டை குழந்தை பிறந்தது

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே கொல்லரகட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 22-ந் தேதி துமகூரு ஆஸ்பத்திரியில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைமாதத்தில் இந்த குழந்தைகள் பிறந்திருந்தன. இதனால் இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு குழந்தை ஆஸ்பத்திரியில் உயிரிழந்தது. மற்றொரு குழந்தையின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இதையடுத்து அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு உடல்நலம் தேறியது.

மூடநம்பிக்கையால்...

இதையடுத்து கடந்த 10-ந் தேதி தாயும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கிராமமக்கள் ஒரு மூடநம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அதாவது எந்த பெண்ணும் குழந்தை பெற்றால் அவர்களை உடனடியாக ஊருக்குள் அனுமதிப்பதில்லை. தாயும், சேயையும் ஊருக்கு வெளியே ஒரு மாதம் குடிசையில் தங்க வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அதன்படி, ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வசந்தாவும், அவரது குழந்தையும் கிராமத்தின் புறநகர் பகுதியில் குடிசையில் வசிக்க வேண்டும் என கூறப்பட்டது.

குழந்தை பரிதாப சாவு

இதையடுத்து கிராமத்தின் வெளிப்பகுதியில் குடிசை அமைத்து தாய் மற்றும் குழந்தை தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக கிராமத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக குடிசையில் தங்க வைக்கப்பட்ட குழந்தைக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அந்த குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தது. ஏற்கனவே ஒரு குழந்தை ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில், கிராமத்தினரின் மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தையும் உயிரிழந்ததால், வசந்தா கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

அடக்கம் செய்ய மறுப்பு

மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை கிராமத்தில் உள்ள மயான நிலத்தில் அடக்கம் செய்ய கிராமத்தினர் மறுத்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சித்தேஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். அவருடன் சுகாதார துறை அதிகாரிகளும் கிராமத்திற்கு வந்தனர். கிராமத்தினருடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கை காரணமாக பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story