இந்தோனேசிய பயணம் நிறைவு; நாடு திரும்பினார் பிரதமர் மோடி


இந்தோனேசிய பயணம் நிறைவு; நாடு திரும்பினார் பிரதமர் மோடி
x

கிழக்காசிய உச்சி மாநாட்டை முடித்து கொண்டு இந்தோனேசியாவில் இருந்து பிரதமர் மோடி இன்று நாடு திரும்பியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஆசியான் மற்றும் இந்தியா மாநாடு இன்று நடைபெற்றது. இதேபோன்று, 18-வது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இந்தோனேசியாவுக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மோடி அந்நாட்டுக்கு சென்றார். தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் பேச்சுவார்த்தையில், அந்த நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக, பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது, மையப்பொருளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசியான் மற்றும் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நட்பு நாடுகளின் தலைவர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இதில், விரிவான செயல்திட்டம் சார்ந்த நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் அதன் வருங்கால முன்னேற்றத்திற்கான விசயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியானின் முக்கியத்துவம் பற்றியும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தி பேசினார்.

இதில், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் திட்ட தொடக்கம் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை பற்றிய ஆசியானின் பார்வை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்கான விசயங்களையும் பிரதமர் மோடி சுட்டி காட்டி பேசினார்.

இதுபற்றி எக்சில் (முன்பு டுவிட்டர்) பிரதமர் வெளியிட்ட செய்தியில், இந்தோனேசிய பயணம் மிக குறுகிய மற்றும் பலனுள்ள ஒன்றாக இருந்தது. இந்த பயணத்தில் ஆசியான் மற்றும் பிற தலைவர்களை சந்தித்தேன்.

அதிபர் ஜோகோ விடோடோ, இந்தோனேசிய அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் ஆகியோரின் வரவேற்புக்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.


Next Story