கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்; தூதர் கண்டனம்


கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்; தூதர் கண்டனம்
x

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை கனடாவில் கொண்டாடிய சம்பவத்திற்கு அந்நாட்டு தூதர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் பிரதமர் படுகொலையை ஆதரிப்பது போன்று கனடாவில் இந்த கண்காட்சி அணிவகுப்பு நடந்து உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ரத்த காயங்களுடன் இந்திரா காந்தியின் சிலை வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான அவர், 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரை பதவியில் இருந்து உள்ளார். அதன்பின் மீண்டும் 1980 ஜனவரியில் இருந்து 1984 அக்டோபரில் படுகொலை செய்யப்படும் வரை பிரதமராக இருந்து உள்ளார்.

அவரை, அரசு இல்லத்தில் வைத்து, அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் சுட்டு கொன்றது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், இதற்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதில், இந்தியாவின் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடுவது போன்ற நிகழ்ச்சி கனடாவில் நடந்துள்ளது என்ற தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வெறுப்புணர்வுக்கோ அல்லது வன்முறையை கொண்டாடுவதற்கோ கனடாவில் எந்த இடமும் இல்லை. இந்த செயல்களை நான் உறுதியாக கண்டிக்கிறேன் என்று டுவிட்டரில் மெக்கே தெரிவித்து உள்ளார்.


Next Story