21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக மோசமான ரெயில் விபத்து
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா ரெயில் விபத்து பதிவாகிவிட்டது.
நமது நாட்டில் 20-ம் நூற்றாண்டிலும், இந்த 21-ம் நூற்றாண்டிலும் நடந்த மோசமான ரெயில் விபத்துகளும், அவற்றின் பாதிப்புகளும் பற்றிய ஒரு அலசல் இது:-
20-ம் நூற்றாண்டு
•தமிழ்நாட்டில் 1964-ம் ஆண்டு பாம்பன் தனுஷ்கோடி பயணிகள் ரெயில், புயலில் அடித்துச்செல்லப்பட்டு நேரிட்ட விபத்தில் 126-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
•பீகாரில் 1981-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி 800-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் ரெயில் ஒரு பாலத்தை கடந்தபோது, பாக்மதி ஆற்றில் விழுந்து கோர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 750-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுதான் நாட்டின் மிக மோசமான ரெயில் விபத்தாக பதிவாகி இருக்கிறது.
•உத்தரபிரதேசத்தில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி பெரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காலிண்டி எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த விபத்தில் 305 பேர் உயிரிழந்தனர்.
•பஞ்சாப்பில் 1998-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கன்னா அருகே தடம்புரண்ட பொற்கோவில் மெயில் ரெயிலின் 3 பெட்டிகளுடன் ஜம்முதாவிசீல்டா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி நேரிட்ட விபத்தில் 212 பேர் பலியாகினர்.
•மேற்கு வங்காளத்தில் 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி கதிஹார் பகுதியில் பிரம்மபுத்ரா மெயில் ரெயில் நின்று கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மோதி நேரிட்ட விபத்தில் 285-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
21-ம் நூற்றாண்டு
•பீகாரில் 2002-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி ரபிகஞ்ச் அருகே தாவி ஆற்றின் பாலத்தில் ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது பயங்கரவாதிகளின் நாசவேலை என கூறப்பட்டது.
•மேற்கு வங்காளத்தில் 2010-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஜானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி சென்றபோது தடம் புரண்டு எதிரே வந்த சரக்கு ரெயிலுடன் மோதியது. இதில் 148 பயணிகள் பலியாகினர்.
•உத்தரபிரதேசத்தில் 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி கான்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் புக்ரயன் என்ற இடத்தில் இந்தூர் ராஜேந்திரநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டதில் புக்ரயன் ரெயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 152 பேர் பலியாகினர். 260 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நூற்றாண்டின் மிக மோசமான விபத்து
•ஒடிசாவில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி பாலசோர் அருகே பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு நேரிட்ட கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதான் இந்த 21-ம் நூற்றாண்டின் மிக மோசமான விபத்து ஆகும்.