உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு ஐ.நா. சபை விருது
இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முன்முயற்சிக்கு ஐ.நா. சபை விருது கிடைத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முன் முயற்சிக்கு ஐ.நா. சபை விருது கிடைத்துள்ளது.
இந்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மாநில அரசுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம்-இந்தியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்திய உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டு முயற்சி உருவாக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார அமைப்பின் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு முயற்சிக்காக இந்தியா ஐ.நா. விருதை வென்றுள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தை இந்திய உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்முயற்சி பலப்படுத்தி உள்ளது.
இந்திய உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்முயற்சி 23 மாநிலங்களில் 138 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 34 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த முயற்சி ஐ.நா.வின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆரோக்கியமான மற்றும் உறுதியான இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.