இந்திய-சீன வர்த்தகம் ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு..!!
கடந்த ஆண்டு இந்திய-சீன வர்த்தகம் ரூ.11 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.4 சதவீதம் அதிகம்.
பீஜிங்,
இந்திய-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் மோதல் நடந்தது. இன்னும் இரு நாட்டு படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்படாததால், அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அருணாசலபிரதேச எல்லையிலும் சண்டை நடந்தது.
இதை மீறி, கடந்த ஆண்டு இரு நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சீன சுங்கத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்தநிலையில், 2022-ம் ஆண்டில், இருநாட்டு வர்த்தகம் ரூ.11 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது முன்எப்போதும் இல்லாத அளவாகும். இதன்மூலம் ஒரே ஆண்டில் வர்த்தகம் 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
பற்றாக்குறை
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சீனா மேற்கொண்ட ஏற்றுமதி ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21.7 சதவீதம் அதிகம்.
இந்தியாவிடம் இருந்து சீனா மேற்கொண்ட இறக்குமதி ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 300 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 37.9 சதவீதம் குறைவு.
இந்தியா ஏற்றுமதி செய்ததை விட இறக்குமதி அதிகமாக செய்ததால், இந்தியா வர்த்தக பற்றாக்குறையை சந்தித்துள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறை முதல்முறையாக 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை 101.02 பில்லியன் டாலர் (ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி) ஆகும். 2021-ம் ஆண்டில் 69 பில்லியன் டாலர் மட்டுமே வர்த்தக பற்றாக்குறையாக இருந்தது.
2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 75.30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள்
இந்தியாவுடன் மட்டுமின்றி உலக நாடுகளுடனும் சீனாவின் வர்த்தகம் வளர்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவில் தேவைகள் குறைந்தபோதிலும், கொரோனா கட்டுப்பாடுகளால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தபோதிலும் சீனாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த இறக்குமதி 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவின் வர்த்தக உபரி 877.6 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.