இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலாவாசி... கோபி தொட்டகுரா
என்.எஸ்-25 என்ற பெயரிலான புதிய திட்டத்தின்படி மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரான், எட் டுவைட், கென் ஹெஸ், கரோல் ஸ்காலெர் மற்றும் கோபி தொடகுரா ஆகிய 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.
புதுடெல்லி,
பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வரும் சூழலில், வேறு கிரகங்களில் உயிரினங்களுக்கான சாத்தியம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, விண்வெளியிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக உலக நாடுகள் சேர்ந்து, விண்வெளி ஆய்வு நிலையங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சுற்றுலாவாசிகளை அழைத்து செல்லும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். அவருடைய புளூ ஆரிஜின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியூ ஷெப்பர்டு திட்டத்தின்படி, இதுவரை 31 மனிதர்கள் விண்வெளிக்கு சென்று உள்ளனர்.
நியூ ஷெப்பர்டு என்ற பெயரிலான ராக்கெட்டுகள் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்கள் கொண்டு செல்லப்படுவர். இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரான், எட் டுவைட், கென் ஹெஸ், கரோல் ஸ்காலெர் மற்றும் கோபி தொடகுரா ஆகிய 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர். இவர்களில் கோபி இந்தியாவை சேர்ந்த தொழில் முனைவோர்களில் ஒருவர் ஆவார். விமானியாகவும் இருந்து வருகிறார்.
1984-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்டு வந்த ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்கு சென்றார். அவருக்கு அடுத்து, விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபி பெற உள்ளார். இந்த பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த விண்வெளி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபி தொடகுரா, எம்பிரி-ரிடில் ஏரோநாடிகல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றவர். அவர், உடல்நல மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரிசர்வ் லைப் கார்ப்பரேசன் என்ற சர்வதேச மையத்தின் துணை நிறுவனராக இருந்து வருகிறார். இந்த மையம் ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைந்துள்ளது.
ஜெட் விமானங்ள் மட்டுமின்றி, சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்ல கூடிய விமானங்கள், கிளைடர் வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் விமானியாக செயல்பட்டு இருக்கிறார்.
சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் தான்சானியாவில் உள்ள மவுண்ட் கிளிமாஞ்சாரோவுக்கு சென்றது இவரது சாதனையாக உள்ளது.
இந்த விண்வெளி பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுபற்றி கோபி கூறும்போது, அன்னை பூமியை பாதுகாப்பதற்காக, பூமிக்கு வெளியே உயிர்களின் வாழ்க்கை மற்றும் விண்வெளியில் சாதனை ஆகியவற்றுக்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
விண்வெளிக்கு அப்பால் உள்ள விசயங்களை அறிந்து கொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்காகவே இந்த பயணம் என அவர் கூறினார்.
அவர் தொடர்ந்து, என்னுடைய உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், அது அகராதியில் இல்லை. அது என்னுடன் நான் எடுத்து செல்ல கூடிய விசயம் என்றும் கூறியுள்ளார்.