'இந்திய இளைஞர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
புலம் பெயர்ந்த இந்திய இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
போபால்,
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 'பிரவாசி பாரதிய திவாஸ்' என்ற மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இன்று தொடங்கியுள்ள இந்த மாநாடு, வரும் 10-ந்தேதி வரை மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெறுகிறது.
இதில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இன்று கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியவதாவது:-
"புலம்பெயர் மக்களுக்கான நமது ஆதரவை அதிகப்படுத்துவதே எங்கள் முயற்சி. ஆன்லைன் வழிமுறைகள் மூலம் குறைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்த இந்திய இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்திய இளைஞர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.