இந்தியாவின் அகல ரெயில்பாதையில் 53,470 கி.மீ. தூரம் மின்மயமானது
இந்தியாவில் அகல ரெயில்பாதை இணைப்புகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைவதில் இந்திய ரெயில்வே தீவிரமாக உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் அகல ரெயில்பாதை இணைப்புகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைவதில் இந்திய ரெயில்வே தீவிரமாக உள்ளது. 2022-2023-ம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் மாதம்வரை 1,223 கி.மீ. வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இது 2021-2022-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 895 கி.மீ. வழித்தட மின்மயமாக்கல் பணிகளை விட 36.64 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்திய ரெயில்வே வரலாற்றில் 2021-2022-ம் நிதியாண்டில் அதிகபட்சமாக 6,366 கி.மீ. வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. அதற்கு முன்பு 2020-2021-ம் நிதியாண்டில் 6,015 கி.மீ. வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டன.
கடந்த அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி இந்திய ரெயில்வேயின் 65 ஆயிரத்து 141 கிலோ மீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53 ஆயிரத்து 470 கிலோ மீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இது மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 82.08 சதவீதம் ஆகும்.
இந்த தகவல்களை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.