காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்; மாணவர்கள் வரவேற்பு!


காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்; மாணவர்கள் வரவேற்பு!
x

காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

பொது-சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவுத் தேர்வுக்கான இரண்டரை மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. பின்தங்கிய மாணவர்களின் படிப்பில் உதவும் நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிஎல்ஏடி நுழைவுத் தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காஷ்மீரின் ரபியாபாத்தில் காரல்குண்டில் உள்ள காசியாபாத் கல்வி நிறுவனத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்பில் 9 மாணவிகள் உட்பட மொத்தம் 21 மாணவர்கள் கலந்துகொள்வார்கள். இந்த வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏழு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டவும் கண்காணிக்கவும் ஒரு ஒருங்கிணைப்பாளர் என ஆசிரியர் குழுவில் உள்ளனர்.

இளைய தலைமுறையினருக்கு கல்வி கற்பதற்கு இந்திய ராணுவம் எடுத்துள்ள முயற்சிகளை ரபியாபாத் மற்றும் காசியாபாத் உள்ளூர்வாசிகள் பாராட்டினர். மேலும், இந்திய ராணுவத்துக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை முன்னேறத் தூண்டுவதாகவும் இத்தகைய திட்டங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வியை மேம்படுத்த உதவுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


Next Story