நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தக்க பதிலடி: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தக்க பதிலடி: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
x

Image Courtacy: PTI

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

ஆயுதப்படை வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் 'மாருதி வீர் ஜவான் டிரஸ்ட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது ஆயுதப்படை வீரர்கள், பிராந்தியம், மதம், சாதி மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி, தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்கிறார்கள். அதோடு பல்வேறு வகையான அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறார்கள். 'புதிய இந்தியா'வை உருவாக்குவதில் தங்கள் பங்கை ஆற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். சேவையில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் அடுத்த உறவினர்களின் நலனுக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இந்தியா அமைதியை விரும்பும் தேசம். எந்த நாட்டையும் புண்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். எல்லைகளில் கடுமையான கண்காணிப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் முழுமையான தற்சார்பு அடையும் என்று ராஜ்நாத் சிங் பேசினார்.


Next Story