பிற நாடுகளுடன் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் இந்தியா; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
இந்தியா பிற நாடுகளுடன் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
பெங்களூரு:
விண்வெளி ஆய்வு மையம்
மறைந்த விண்வெளி விஞ்ஞானி யு.ஆர்.ராவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனரும், விண்வெளி விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-
இந்தியா பிற நாடுகளுடன் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். குறைந்தபட்சம் விண்வெளியில் ஆவது எந்த எல்லையும் இருக்க கூடாது என்ற சிந்தனையுடன் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் சமூகத்தின் இந்த ஆசைக்கு பல்வேறு முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விஞ்ஞானிகளின் மரியாதை
இந்த திட்டத்தை வெற்றிபெற வைக்க விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். யு.ஆர்.ராவ் பெங்களூருவில் இஸ்ரோ துணைக்கோள் மையம் அமைய பாடுபட்டார். அவர் குறித்த புத்தகம் மற்றவர்களுக்கு வழியாட்டியாக அமையும். அவர் எப்போதும் அனுதாபத்தை விரும்பவில்லை. விஞ்ஞானிகளின் மரியாதை மட்டுமே தமக்கு கிடைக்க வேண்டும் என்று கருதியவர்.
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.