இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொழும்பு,
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டார்.
போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும்.இலங்கையும் ,அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது .இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.என மத்தியவெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.