2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்: சர்வதேச நிறுவனம் கணிப்பு
2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது.
புதுடெல்லி,
உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன.
இந்நிலையில், 2030-ம் ஆண்டுக்குள், இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது. அந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியா, தற்போதைய ஆண்டிலும் நிலையான, வலுவான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில், அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. நடுத்தர வகுப்பினர் செலவழிப்பது அதிகரித்து வருகிறது. நுகர்வோர் சந்தை விரிவடைவதால், பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு அதிகரிக்கும்.
இந்த காரணங்களால், 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 ட்ரில்லியன் டாலராக (ரூ.600 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை முறியடித்து, உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும். ஆசியாவில் 2-வது இடத்தை பிடிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.