இந்தியா ஜனநாயகத்தின் தாயகம்; தன்னகத்தே கொண்ட விலை மதிப்பில்லா திறமையை நிரூபித்துள்ளது: பிரதமர் மோடி உரை
இந்தியா தன்னகத்தே விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது என நிரூபித்ததுடன் தனது 75 ஆண்டுகால பயணத்தில் பல சவால்களை சந்தித்து உள்ளது என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின், டெல்லி செங்கோட்டைக்கு தேசியக்கொடி ஏற்ற புறப்பட்டார். இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன், டெல்லி செங்கோட்டையில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதன்படி, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார். இதனையொட்டி வானில் ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவியபடி சென்றன. இதன்பின்னர், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.
அவர் பேசும்போது, சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின்போது, நம்முடைய தேசத்தின் பல்வேறு நாயகர்களை நாம் நினைவுகூர்ந்தோம். ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினையின் பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தோம். இன்றைய நாள், கடந்த 75 ஆண்டுகளாக நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல பங்காற்றிய நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூர வேண்டிய நாள்.
நாட்டு விடுதலைக்காக போராடிய அல்லது தேச கட்டமைப்பு பணியில் ஈடுபட்டவர்களான டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேருஜி, சர்தார் பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, லால் பகதூர் சாஸ்த்ரி, தீன்தயாள் உபாத்யாய், ஜே.பி. நாராயண், ராம் மனோகர் லோகியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற பெருந்தகையாளர்களின் முன் தலை வணங்க வேண்டிய தினம் இன்று என அவர் பேசியுள்ளார்.
இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். தனது 75 ஆண்டுகால பயணத்தில் பல சவால்களை சந்தித்ததுடன், தன்னகத்தே விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது என இந்தியா நிரூபித்து உள்ளது என அவர் பேசியுள்ளார்.