உலகளாவிய நலன் சார்ந்த சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது: பிரதமர் மோடி உரை
அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய நலன் சார்ந்த சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என பிரதமர் மோடி உரையில் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலி வழியே மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதில், பல நல்ல விசயங்களை பகிர்ந்து வருகிறார். இதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு பேசி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது என கூறியுள்ளார்.
இந்தியா ஜி-20 தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையை பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர். அம்ரித் கால் திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்தியா பெற்றது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம். உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும்.
அதனுடன் தொடர்புடைய விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.