ஹமாஸ், இஸ்ரேல் இடையே நடப்பது போன்ற போரை இந்தியா கண்டதில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர்
இந்துத்துவம் அனைத்து பிரிவினரையும் மதிக்கின்றது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
நாக்பூர்,
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டி 350 ஆண்டுகள் ஆன நிகழ்வையொட்டி, மராட்டியத்தின் நாக்பூர் நகரில் பள்ளி ஒன்றில் விழா நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, இந்த நாட்டில், அனைத்து பிரிவினர் மற்றும் நம்பிக்கைகளை மதிக்க கூடிய ஒரு மதம், கலாசாரம் உள்ளது. அந்த மதம் இந்துத்துவம். இந்துக்களை கொண்ட நாடு இது. அதற்கு, நாங்கள் மற்ற அனைவரையும் (மதங்கள்) நிராகரிக்கிறோம் என்பது பொருள் அல்ல.
இந்து என நீங்கள் ஒருமுறை கூறிவிட்டாலே, முஸ்லிம்களும் கூட பாதுகாக்கப்படுவார்கள் என்று கூற வேண்டிய தேவையில்லை. இந்துக்கள் மட்டுமே இதனை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதனை செய்கிறது. மற்றவர்கள் இதனை செய்யவில்லை என்று பகவத் பேசியுள்ளார்.
ஒவ்வோர் இடத்திலும் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. உக்ரைனில் நடந்து வரும் போர், ஹமாஸ்-இஸ்ரேல் போரை பற்றி நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். நம்முடைய நாட்டில், அதுபோன்ற விசயங்களுக்காக ஒருபோதும் போர்கள் ஏற்பட்டதில்லை.
சிவாஜி மகாராஜா காலத்தில் நடந்த படையெடுப்பும் கூட அதுபோலவே இருந்தது. ஆனால், இதுபோன்ற விசயங்களுக்காக, நாம் ஒருபோதும், யாருடனும் போரிட்டதில்லை. அதனாலேயே நாம் இந்துக்களாக இருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.