உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம் - 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேச்சு
உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். கவனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டிற்கான கடைசி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி காலை 11.00 மணிக்கு தொடங்குகியது. இது 96-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கல்வி, வெளியுறவுக் கொள்கை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர்.
2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். நாம் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்து விட்டோம். இனி, காலா அசார் நோயும் நீங்கும். இந்த நோய் பீகார் மற்றும் ஜார்கண்டின் 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால், நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18% குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கங்கை போன்ற நதிகளை தூய்மையாக வைத்திருப்பது நமது தலையாய பொறுப்பு. கங்கை அன்னையுடன் நமது கலாசாரம், பாரம்பரியம் மிகுந்த பிணைப்பைக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.