சுமுகமாக இருந்தாலும் சீனாவுடனான எல்லை சூழல் கணிக்க முடியாதது- ராணுவ தளபதி மனோஜ் பாண்டே


சுமுகமாக இருந்தாலும் சீனாவுடனான எல்லை சூழல் கணிக்க முடியாதது- ராணுவ தளபதி மனோஜ் பாண்டே
x

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை சூழல் சுமுகமாக இருந்தாலும், கணிக்க முடியாதது என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.

தொடர் பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின்பு, அங்கு இன்னும் நீடித்த அமைதி ஏற்படவில்லை.

அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீன ராணுவத்தை வாபஸ் பெறச்செய்ய தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும் ஒரு சில இடங்களை தவிர பிற பகுதிகளில் இருந்து சீன ராணுவம் இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.

இது ஒருபுறம் இருக்க, சீன அதிபராக சமீபத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஜின்பிங், படைகளை போருக்கு தயாராகுமாறு கட்டளையிட்டு உள்ளார். இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

சுமுகமாக உள்ளது

இந்த சூழலில் டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கலந்துகொண்டு ேபசினார். அப்போது லடாக் நிலவரம் குறித்தும் அவர் கருத்துகளை தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசும்போது அவர் கூறியதாவது:-

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை சூழல் சுமுகமாக உள்ளது. ஆனால் கணிக்க முடியாதது.

இரு நாட்டு எல்லையில் நிலவும் மீதமுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக உயர்மட்ட அதிகாரிகள் இடையேயான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான 17-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து விவாதித்து வருகிறோம்.

படைகள் குறைப்பு இல்லை

எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கையில், குறிப்பிடத்தக்க குறைப்பு எதுவும் இல்லை. எல்லை பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு பணிகளும் தடையின்றி நடந்து வருகிறது.

இந்திய ராணுவத்தின் தயார் நிலையை பொறுத்தவரை, குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான மாற்றங்கள் நடந்து வருகிறது.

நமது நலன்கள் மற்றும் உணர்திறன்களை பாதுகாக்க அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதி மீதான நமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக அளவீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வாறு ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறினார்.


Next Story