இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவது நிச்சயம் - சிராக் பஸ்வான்
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிதிஷ்குமாரை நம்பவில்லை என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார்.
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையத்தில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியின் போது நிதிஷ் குமார் அவரை கடுமையாக எதிர்த்தார். லாலு பிரசாத் யாதவும் அதையே செய்தார். இன்று, அவர்கள் அதிகாரத்தின் பேராசையால் மட்டுமே ஒன்றிணைந்துள்ளனர். மாநிலத்தின் தற்போதையை அவர்களது கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியாகும். பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் அனைவருக்கும் துரோகம் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அவரை நம்பாததற்கு இதுவே காரணம். இதுவரை அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கூட வழங்கப்படவில்லை. அதேசமயம் நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கான கோரிக்கையுடன் அந்த கூட்டணிக்கு சென்றுள்ளார். தனது லட்சியம் நிறைவேறாவிட்டால், அந்த கூட்டணியை விட்டும் அவர் கண்டிப்பாக விலகுவார். இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் இருந்த ஆக்ரோஷமான போக்கு இப்போது அவரிடம் தெரியவில்லை.
இவ்வாறு சிராக் பஸ்வான் கூறினார்.