ராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று தொடங்குகிறது


ராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று தொடங்குகிறது
x

Image Courtesy : ANI

ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்களத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியை நடத்தி வருகின்றன. 'ஆஸ்திரா ஹிந்த்' எனப்படும் இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி ராஜஸ்தானில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்களத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் 2-வது மண்டலத்தின் 13-வது படைப்பிரிவு வீரர்கள் ராஜஸ்தான் வந்துள்ளனர். இதைப்போல இந்தியா சார்பில் டோக்ரா படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இரு படைகளின் அனைத்து ஆயுதங்கள் மற்றும் பிரிவுகள் பங்கேற்கும் முதல் கூட்டுப்பயிற்சி இது ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

பாலைவனம் சார்ந்த நிலப்பரப்பில் பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துதலே இந்த பயிற்சியின் நோக்கம் என்றும் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது.


Next Story