சந்திரயான் - 3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி இந்தியா கூட்டணி தீர்மானம்
சந்திரயான் - 3 திட்டம் வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணி அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடைபெற்றன.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அணியின் மூன்றாவது கூட்டம் மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 2-ம் நாள் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்றதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.