உலகளாவிய உணவு பாதுகாப்புக்கான தீர்வுகளை வழங்க இந்தியா செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி


Narendra Modi, International Conference of Agricultural Economists
x

Image Credit: PTI

உலகளாவிய விவசாய சவால்களுக்கு இந்தியாவின் முன்முயற்சி அணுகுமுறையை இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா உணவு உபரி நாடாக மாறிவிட்டதாகவும், உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாய பொருளாதார நிபுணர்களின் 32வது சர்வதேச மாநாடு இன்று புதுடெல்லியில் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது,

65 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற மாநாடு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை இங்கு மாநாடு நடத்தப்பட்டபோது, இந்தியா சுதந்திரமடைந்தது. அது நாட்டின் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பிற்கு சவாலான நேரமாக இருந்தது.

ஆனால், இன்று இந்தியா உணவு உற்பத்தியில் உபரி நாடாக திகழ்கிறது. உலகின் மிகப் பெரிய பால், பருப்பு மற்றும் மசாலா உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அதேபோல உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை மற்றும் தேயிலை உற்பத்தியில் நாடு 2வது பெரிய நாடாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகின் கவலையாக இருந்தது. இன்று இந்தியா உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 1,900 புதிய காலநிலையை தாங்கக்கூடிய பயிர்களை வழங்கியுள்ளது. மேலும் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை எட்டுவதை நோக்கி நாடு முன்னேறி வருகிறது.

இந்த மாநாடு உலகளாவிய விவசாய சவால்களுக்கு இந்தியாவின் முன்முயற்சி அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் நாட்டின் முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்த மாநாடு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கொள்கை வகுப்பதில் செல்வாக்கு செலுத்துவதையும், டிஜிட்டல் விவசாயம் மற்றும் நிலையான விவசாய உணவு முறைகளில் முன்னேற்றம் உள்பட இந்தியாவின் விவசாய முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story