சுதந்திர தின நிகழ்ச்சி: பறக்காமல் கீழே விழுந்த புறா; வைரலான வீடியோ


சுதந்திர தின நிகழ்ச்சி:  பறக்காமல் கீழே விழுந்த புறா; வைரலான வீடியோ
x

சத்தீஷ்காரில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, பறக்க விடப்பட்ட புறா கீழே விழுந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி கலெக்டருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

முன்ஜெலி,

நாடு முழுவதும் சுதந்திர தினம் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதில், சத்தீஷ்காரின் முன்ஜெலி மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரியான புன்னுலால் மோலே கலந்து கொண்டார்.

இதேபோன்று கலெக்டர் ராகுல் தியோ மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு (எஸ்.பி.) கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அமைதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் விதத்தில் புறா பறக்க விடும் நிகழ்வு நடந்தது.

இதில் புறா ஒன்றை எம்.எல்.ஏ. விடுவித்ததும், அது பறந்து சென்றது. ஆனால், எஸ்.பி. பறக்க விட்ட புறாவோ, மேலே பறக்காமல் தரையில் விழுந்தது. இந்த சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டருக்கு எஸ்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், சுதந்திர தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், புறா தரையில் விழுந்த நிகழ்வு சமூக ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது. கொடியேற்று நிகழ்வில், நோய்வாய்ப்பட்ட புறா ஒன்றை வழங்கியதே, இதுபோன்றதொரு சூழலை ஏற்படுத்தி உள்ளது.

சிறப்பு விருந்தினருக்கு இந்த சம்பவம் ஏற்பட்டு இருப்பின், நிலைமை விரும்பத்தகாத அளவில் இருந்திருக்கும் என கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

சுதந்திர தினத்திற்கு முன் அனைத்து துறையின் தலைவர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அவரவர்களுக்கான பணிகளை மேற்கொள்ளும்படி பொறுப்பு வழங்கப்பட்டது.

அதனால், சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு முழு அளவில் வெற்றி பெறும். ஆனால், இந்த பணிக்கு பொறுப்பான அதிகாரி அவருடைய பொறுப்பை முறையாக மேற்கொள்ளவில்லை.

அதனால், சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது என அந்த கடிதம் தெரிவிக்கின்றது.


Next Story