சீனாவில் சுவாச நோய் பரவல் அதிகரிப்பு; இந்திய டாக்டர்கள் கூறுவது என்ன...?


சீனாவில் சுவாச நோய் பரவல் அதிகரிப்பு; இந்திய டாக்டர்கள் கூறுவது என்ன...?
x
தினத்தந்தி 25 Nov 2023 11:34 AM IST (Updated: 25 Nov 2023 11:44 AM IST)
t-max-icont-min-icon

குறைவான எதிர்ப்பு சக்தியால், இதுபோன்ற பாதிப்புகள் திரும்பவும் தோன்றியுள்ளன என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சீனாவில் பரவி வரும் சுவாச நோய் தொற்றால் குழந்தைகள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். எச்9என்2 வகை வைரசின் பாதிப்புகளால், மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது அரசுக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அண்டை நாடான இந்தியாவில் இதன் பாதிப்புகள் என்ன வகையான தாக்கம் ஏற்படுத்தும்? என்பது பற்றி டாக்டர்கள் கூறும் விசயங்களை காண்போம்.

இதுபற்றி டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் இயக்குநரான, டாக்டர் அஜய் சுக்லா பேசும்போது, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.

தூய்மையான பழக்க வழக்கங்களை சீராக கடைப்பிடியுங்கள். யாருக்காவது சுவாச பாதிப்பு அல்லது தொற்று ஏற்பட்டு உள்ளது என உணர்ந்தீர்கள் என்றால், மற்றவர்களிடம் இருந்து சற்று இடைவெளியை கடைப்பிடிக்கவும். ஏனெனில், இவை கடுமையான நச்சுத்தன்மை கொண்டதுடன், அதிகம் பரவும் தன்மையும் உடையது என கூறியுள்ளார்.

பாதுகாப்புக்காக முக கவசம் அணியும்படி வலியுறுத்திய சுக்லா, உங்களுடைய குழந்தைகளுக்கு இருமல், ஜலதோஷம், காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களிடம் பேசுங்கள். பள்ளியில் வேறு யாருக்காவது பாதிப்பு இருக்கின்றதா? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய குழந்தைகளுக்கு பாதிப்பு காணப்பட்டால், பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். சீனாவில் ஒரு சில மையங்களில், ஒரு நாளைக்கு 1,200 குழந்தைகள் என்ற விகிதத்தில் மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நிலைமை மோசமடைந்து உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

கொரோனா பெருந்தொற்று தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு உத்தரவால், மக்கள் மற்றும் குழந்தைகளிடம் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த குறைவான எதிர்ப்பு சக்தியால், இதுபோன்ற பாதிப்புகள் திரும்பவும் தோன்றியுள்ளன என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவல், ஊரடங்கு அமல் ஆகியவற்றின் பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத சூழலில், புதிய வகை மர்ம காய்ச்சல் அந்நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது.

இதனால், கல்வி நிலையங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா பெருந்தொற்றின் தொடக்க காலத்தில் காணப்பட்ட அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டு உள்ளது.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து, தேசிய சுகாதார ஆணையத்தின் சுகாதார அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அதில், அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளை பற்றி எடுத்துரைத்தனர்.

இதில், லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவலை அதிகாரிகள் மறைக்கிறார்களா? என பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நிமோனியா வகை தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனால் தீவிர சுவாச கோளாறுகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படும் என்றும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது.

இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது. பொது சுகாதார அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது. தனிநபர்கள், ஆபத்துகளை குறைத்து கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.


Next Story