காற்று மாசுபாடு அதிகரிப்பு; டெல்லியில் அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு


காற்று மாசுபாடு அதிகரிப்பு; டெல்லியில் அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
x

டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று தரக்குறியீடு 343 என மிக மோசமடைந்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தலைமையில் நேற்று சீராய்வு கூட்டம் ஒன்று டெல்லி செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை அடுத்து, அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் முதன்மை பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், நகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் சுகாதாரத்திற்கு எதிரான விளைவுகள் ஏற்படுகின்றன என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. சில சமயங்களில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டிய தேவையும் ஏற்பட்டு உள்ளது.

இதில், நோயாளிகளின் நிலைமை மோசமடையும்போது, அவர்கள் அவசரகால சிகிச்சை பெற வேண்டிய நிலைமைக்கும் ஆளாகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாடுகளால் குழந்தைகள் தீவிர பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது.

டெல்லியில் வசித்து வருபவர்களில் பலர் நெஞ்சு வலி, கடுமையான இருமல், சுவாசிப்பதில் கடினம் உள்ளிட்ட சுவாச பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது. காலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், சைக்கிளிங் செல்பவர்களும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


Next Story