காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது - தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா?


காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது - தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா?
x
தினத்தந்தி 14 Oct 2023 5:30 AM IST (Updated: 14 Oct 2023 6:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடந்த வருமான வரி சோதனையில் காண்டிராக்டர் படுக்கை அறையில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி சிக்கியது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி காண்டிராக்டராக இருந்து வருபவர் அம்பிகாபதி. இவர் அரசு காண்டிராக்டர்கள் சங்கத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார். இவரது மனைவி அஸ்வதம்மா மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பெங்களூரு மான்யதா டெக் பார்க் அருகே உள்ள அம்பிகாபதியின் வீடு, ஹெப்பாலில் உள்ள அவரது மகளுக்கு சொந்தமான வீடு, சுல்தான் பாளையா ஆத்மானந்தா காலனியில் இருக்கும் அவருடைய உறவினர் பிரதீப்புக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்காக சென்னை, மும்பையில் இருந்து அதிகாரிகள் சென்றிருந்தனர்.

இந்த சோதனையின்போது அம்பிகாபதியின் வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆத்மானந்தா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருக்கும் அம்பிகாபதியின் உறவினர் பிரதீப்புக்கு சொந்தமான வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்குள்ள படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 23 அட்டை பெட்டிகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து, ரூபாய் நோட்டுகளை எண்ணும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணும் பணிகள் நடைபெற்றது.

அப்போது ஒட்டு மொத்தமாக ரூ.42 கோடி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பணத்திற்கு உரிய எந்த ஆவணங்களும் பிரதீப்பிடம் இல்லை. இதையடுத்து, ரூ.42 கோடியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். 23 பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் ரூ.1½ கோடிக்கு மேல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணம் சிக்கியது குறித்து அம்பிகாபதி, அவரது மனைவி மற்றும் பிரதீப்பிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

ரூ.42 கோடி சிக்கிய பிரதீப்பின் வீட்டில் யாரும் வசிக்கவில்லை. ஆனால் அம்பிகாபதி அந்த வீட்டை பயன்படுத்தி வந்ததுடன், அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. பணம் சிக்கிய படுக்கையறையை அவர்தான் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அந்த குடியிருப்பில் இருந்து முதலில் ரூ.15 கோடிக்கும் மேல் ஒரு காரில் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்பிறகு தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதும், இந்த சோதனையில் படுக்கை அறையில் பதுக்கிய ரூ.42 கோடி ரொக்கம் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. அந்த ரூ.42 கோடியையும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும், அங்கிருந்து ஐதராபாத்திற்கும் கடத்தி செல்வதற்காக அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அம்பிகாபதிக்கு இந்த அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது, பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அம்பிகாபதி, அவரது மனைவி மற்றும் உறவினர் பிரதீப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சோதனையில் சிக்கியுள்ள ரூ.42 கோடி நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

பெங்களூருவில் காண்டிராக்டர் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story