காங்கிரஸ் பிரமுகர் 'கே.ஜி.எப்.' பாபு வீட்டில் வருமான வரி சோதனை


காங்கிரஸ் பிரமுகர் கே.ஜி.எப். பாபு வீட்டில் வருமான வரி சோதனை
x

மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் காங்கிரஸ் பிரமுகர் ‘கே.ஜி.எப்.’ பாபு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நேற்று நடந்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரின் வங்கி கணக்குகளில் ரூ.350 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு

மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் காங்கிரஸ் பிரமுகர் 'கே.ஜி.எப்.' பாபு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நேற்று நடந்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரின் வங்கி கணக்குகளில் ரூ.350 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப். பாபு

பெங்களூரு வசந்த்நகர் பகுதியில் வசித்து வருபவர் யூசுப் ஷெரீப் என்கிற 'கே.ஜி.எப்.' பாபு. காங்கிரஸ் பிரமுகரான இவர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளரும் ஆவார். தொழில் அதிபரான யூசுப் ஷெரீப் பழைய இரும்பு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவர் கோலாரை பூர்வீகமாக கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேல்-சபை தேர்தலில் பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யூசுப் ஷெரீப் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.1,741 கோடி என்று கூறியிருந்தார். ஆனால் அந்த தேர்தலில் யூசுப் ஷெரீப் தோல்வி அடைந்தார். தோல்வியை தாங்க முடியாமல் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி சென்று இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

வருமான வரி சோதனை

இந்த நிலையில் யூசுப் ஷெரீப் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டு இருப்பதாகவும் அவருக்கு ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை சொத்துகள் இருக்கலாம் என்றும் பா.ஜனதாவினர் கூறி இருந்தனர். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக யூசுப் ஷெரீப் சொத்து குவித்ததாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று காலை 6.30 மணியளவில் பெங்களூரு வசந்த்நகரில் உள்ள யூசுப் ஷெரீப் வீட்டிற்கு 5 கார்களில் வருமான வரித்துறையினர் சென்றனர்.

இதன்பின்னர் யூசுப் ஷெரீப்பின் சொகுசு பங்களா, வசந்த்நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என 6 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க யூசுப் ஷெரீப் வீட்டின் முன்பு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வங்கி கணக்கில் ரூ.350 கோடி

இதுபோல மைசூரு பன்னிமண்டபம் பகுதியில் உள்ள யூசுப் ஷெரீப்பின் உறவினரான மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ரஷ்மிகா பானு என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். சோதனையின் போது வருமான வரித்துறையினருக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாகவும், அதை கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.


Next Story