விசாகப்பட்டினத்தில் ரோஜா உள்ளிட்ட மந்திரிகளின் கார்கள் மீது கல் வீசி தாக்குதல்..!


விசாகப்பட்டினத்தில் ரோஜா உள்ளிட்ட மந்திரிகளின் கார்கள் மீது கல் வீசி தாக்குதல்..!
x

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரோஜா உள்ளிட்ட மந்திரிகளின் கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதுதொடர்பாக ஜன சேனா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 3 தலைநகரங்கள் முடிவுக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் 'விசாகா கர்ஜனா' என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற ரோஜா உள்ளிட்ட ஆளுங்கட்சி மந்திரிகள், நிர்வாகிகள் விமான நிலையத்துக்கு திரும்பினர்.

அப்போது, மக்கள் குறை தொடர்பான மனுக்களை பெறும் 'ஜனவானி நிகழ்ச்சி'க்காக ஜன சேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கு அவரை வரவேற்க ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் காத்திருந்தனர். அவர்களில் பலரை விமான நிலையத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதையடுத்து ஏற்பட்ட பிரச்சினையில், ரோஜா உள்ளிட்ட மந்திரிகளின் கார்கள் மீது சரமாரியாய் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மேலும், கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக ஜன சேனா முக்கிய நிர்வாகிகள் 15 பேர் உள்பட அக்கட்சி தொண்டர்கள் சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜன சேனா தலைவர் பவன் கல்யாண், தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். போலீசார் தன்னையும் அவமதித்ததாக குற்றம்சாட்டிய அவர், கைது செய்யப்பட்ட கட்சியினரை விடுவிக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தங்களின் ஜனவானி நிகழ்ச்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பேரணிக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. தற்போதைய கைது நடவடிக்கை காரணமாக, ஜனவானி நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.

ஆளும்கட்சியின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் கூறிய அவர், மாநிலத்தில் ஆட்சி மாறும்போதெல்லாம் தலைநகரை மாற்ற முடியாது என்றார்.

ஜன சேனா கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story