உடுப்பியில் துணிகரம் 2 வீடுகளில் புகுந்து ரூ.14½ லட்சம் தங்க நகைகள் திருட்டு
உடுப்பியில் 2 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடி சென்றனர்.
மங்களூரு-
உடுப்பியில் 2 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடி ெசன்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து
உடுப்பி டவுன் மல்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட கின்னிமுல்கி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் செனாய். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லை. இந்தநிலையில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை சாவியை வைத்து திறந்துள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இந்தநிலையில் வெளியே சென்றிருந்த வெங்கடேஷ் செனாய் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த அவர் பீரோவை சோதனை செய்தார்.
160 கிராம் தங்க நகைகள் திருட்டு
அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க, வெள்ளி நகைகள் மாயமாகியிருந்தது. இதுகுறித்து அவர் உடனே மல்பே போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்ம நபர்கள் ரூ.8.35 லட்சம் மதிப்பிலான 160 கிராம் தங்க நகைகள், 5 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றதாக தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேஷ் செனாய் கொடுத்த புகாரின் பேரில் மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரூ.6.30 லட்சம் நகைகள்
இதேபோல உடுப்பி டவுன் குஞ்சிபெட்டு பகுதியை சேர்ந்தவர் கங்காதர். சம்பவத்தன்று இவரது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.6.30 லட்சம் மதிப்பிலான 116 கிராம் தங்க நகைகளை திருடி சென்றதாக தெரியவந்தது.
இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து கங்காதர் கொடுத்த புகாரின் பேரில் உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த 2 சம்பவங்களில் மொத்தம் ரூ.14.65 லட்சம் தங்க நகைகள் திருடுபோனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.