உடுப்பி, மங்களூருவில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க கோரிக்கை


உடுப்பி, மங்களூருவில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி, மங்களூரு பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்கும்படி மாநில அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மங்களூரு-

உடுப்பி, மங்களூரு பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்கும்படி மாநில அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சக்தி திட்டம்

காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 உத்தரவாத திட்டங்களை கூறியிருந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது. இந்தநிலையில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச திட்டத்தை முதல்- மந்திரி சித்தராமையா கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அரசு பஸ்களில் பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். இதனால் மாநில அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா காலத்தில் பல இடங்களில் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதேப்போல், உடுப்பி, மங்களூரு பகுதிகளில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் தற்போது வரை சேவை தொடங்கப்படவில்லை. மேலும் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்தநிலையில் உடுப்பியில் இருந்து மணிப்பால், ஹூட், கல்லியன்பூர், மார்னே, மல்பே, கெலசுங்கா, கொக்கர்னே, பேர்தூர், நெல்லிக்கட்டே, மஞ்சக்கல், கெம்மன்னு-ஹம்பனகத்தே, ஹொன்னாலா மற்றும் படுகரே ஆகிய இடங்களுக்கும், மங்களூருவில் இருந்து முடிப்பு, அடையாறு, பஜ்பே, மல்லூர், முக்கா, குர்பூர், கைகம்பா, கணேஷ்புரா, சோமேஸ்வரா, வாமஞ்சூர், குஞ்சத்பையல், சேலாரு, எம்.ஆர்.பி.எல். காலனி, ரெஹ்மத் நகர், அம்மேபால தர்கா, கென்யா ஆகிய பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கூடுதல் பஸ்களை இயக்க

கொரோனா காரணமாக, சில பஸ்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. தற்போது அந்த மாவட்டங்களில் பஸ் சேவை தேவைப்படுகிறது.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். அதாவது, உடுப்பியில் 7 வழித்தடங்களிலும், மங்களூருவில் 13 வழித்தடங்களிலும் அரசு பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து மங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி. கோட்ட கட்டுப்பாட்டாளர் ராஜேஷ் ஷெட்டி கூறும்போது, உடுப்பி மற்றும் மங்களூரு பகுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



Next Story