டெல்லியில் செயற்கை மழை: அரசு தீவிர ஆலோசனை
செயற்கை மழைக்கு குறைந்தது 40 சதவீத மேகமூட்டம் தேவை என குழுவினர் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
டெல்லி மாநகரம், காற்று மாசால் தவித்து வருகிறது. மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். காற்று மாசை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, மாசு தடுப்பில் சுப்ரீம் கோர்ட்டும் அக்கறை காட்டி இருக்கிறது. இதன்படி டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வயல்வெளி கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மாசை தடுக்க செயற்கை மழை வரவைப்பதற்கான திட்டத்தையும் டெல்லி அரசு முன்மொழிந்துள்ளது. இதுகுறித்து கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சிக்குழுவினருடன் டெல்லி சுற்றுச்சூழல் மந்திரி கோபால்ராய் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அப்போது செயற்கை மழைக்கு குறைந்தது 40 சதவீத மேகமூட்டம் தேவை என குழுவினர் தெரிவித்தனர். வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் டெல்லியில் மேகமூட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த நாட்களில் திட்டம் சோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி அரசு இன்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து அனுமதி பெற முயற்சிக்கும் என டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.