டீக்கடையில் அமர்ந்து கவர்னர் 2 மணிநேரம் தர்ணா... இசட் பிளஸ் பாதுகாப்பு... 17 பேர் மீது வழக்குப்பதிவு - என்ன நடந்தது கேரளாவில்...?
கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, கேரள அரசுக்கும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்ட நாட்களாக மோதல்போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் கேரள சட்டசபை கூட்டத்தொடரின்போது மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையை வாசிக்காமல் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு சிலநிமிடங்களில் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆரிப் முகமது கான் வெளியேறினார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று மதியம் கவர்னர் ஆரிப் முகமது கான் காரில் சென்றுகொண்டிருந்தார். ஆனால், கொட்டாரக்கராவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (எஸ்.ஐ.எப்.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலம்மல் பகுதியில் கவர்னரின் கார் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் இருபுறமும் கூடியிருந்த எஸ்.ஐ.எப். அமைப்பினர் கவர்னரின் வருகைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த கவர்னர் ஆரிப் முகமது கான் தன் காரில் இருந்து கீழே இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
பரபரப்பான எம்.சி. சாலையில் காரில் இருந்து கீழே இறங்கிய கவர்னர் ஆரிப் முகமது கான் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சென்றார். அப்போது, சாலையோரம் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனால், ஆத்திரமடைந்த கவர்னர் ஆரிப் முகமது கான் சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை கடுமையாக சாடினார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக குற்றஞ்சாட்டிய கவர்னர், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை காட்டவில்லையென்றால் இங்கிருந்து நகரப்போவதில்லை என்று எச்சரிக்கைவிடுத்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய கவர்னர், போலீஸ் உயர் அதிகாரியை தொடர்புகொள்ளுங்கள் இல்லையேல் பிரதமர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுங்கள் என்று உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, கவர்னர் தர்ணாவில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆர். ஆவணத்தை சமர்ப்பித்தனர். இதனைதொடர்ந்து டீக்கடையில் 2 மணிநேரமாக காத்திருந்த கவர்னர் ஆரிப் முகமது தனது தர்ணாவை முடித்துக்கொண்டு கொட்டாரக்கராவுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுடன் கூடிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.