வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிவமொக்கா-
வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
முன்விரோதம்
சிவமொக்கா டவுன் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பச்சா (வயது 19). இவருக்கும் இலியாஸ் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் பச்சா மற்றும் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பச்சா அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இலியாஸ் பகுதியை சேர்ந்த ஷாருக்கான், ஹர்பாஜ், சாதாப், அலயாஜ் ஆகியோர் வந்தனர். அவர்கள் பச்சாவிடம் தகராறு செய்தனர்.
அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், மோட்டார் சைக்களில் பச்சா தொட்டபேட்டை பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஷாருக்கான், ஹர்பாஜ், சாதாப், அலயாஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் பச்சா மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவரிடம் மீண்டும் அவர்கள் 4 பேரும் தகராறு செய்தனர்.
கோர்ட்டில் குற்றப்பத்திரிகை
அப்போது அவர்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து பச்சாவின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பச்சா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பச்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பச்சாவை கொலை செய்த ஷாருக்கான், ஹர்பாஜ், சாதாப், அலயாஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. தொட்டபேட்டை போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் பச்சாவை கத்தியால் குத்தி கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஷாருக்கான், ஹர்பாஜ், சாதாப், அலயாஜ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.