இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
மங்களூரு;
இளம்பெண் பலாத்காரம்
தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி பகுதியை சோ்ந்தவா் ஆனந்தா. தொழிலாளி. இதேபோல் அதே பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தா கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இளம்பெண்ணின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லாததை அறிந்து உள்ளே புகுந்துள்ளார்.
பின்னர் அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் பயந்து போன இளம்பெண், தனது பெற்றோரிடம் நடந்து சம்பவத்தை கதறி அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிா்ச்சி அடைந்து அவர்கள் உடனே இதுகுறித்து மங்களூரு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
4 ஆண்டுகள் சிறை
அதன்பேரில் போலீசார் ஆனந்தாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இதுதொடர்பான வழக்கு விசாரணை மங்களூருவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் வழக்கு குறித்து போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார். அதில் ஆனந்தா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.