சிவமொக்காவில் ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
சிவமொக்காவில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வந்த தனியார் மருத்துவமனை ஊழியரிடம் ரூ.1 ½ லட்சம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வந்த தனியார் மருத்துவமனை ஊழியரிடம் ரூ.1 ½ லட்சம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
பட்டாவில் பெயர் மாற்றம்
சிவமொக்காவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் அருண் குமார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு துணை தலைவராகவும், வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
தாசில்தாருக்கு அடுத்தப்படியான இடத்தில் இவர்தான் உள்ளார். இந்தநிலையில் சிவமொக்கா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அனுமந்த் என்பவர் தனது வீட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ரூ.1½ லட்சம் லஞ்சம்
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த துணை தாசில்தார் அருண் குமார், தனியார் மருத்துவமனை ஊழியர் அனுமந்த்திடம் ரூ.1½லட்சம் லஞ்சம் கேட்டார். முதலில் மறுப்பு தெரிவித்த அனுமந்த் பின்னர் சம்மதம் தெரிவித்தார். இதற்கிடையில் அனுமந்த் லோக் அயுக்தா போலீசில் துணை தாசில்தார் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தார்.
அந்த புகாரை ஏற்ற லோக் அயுக்தா போலீசார் அனுமந்த்திற்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.1½ லட்சத்தை கொடுத்து, துணை தாசில்தாரிடம் வழங்கும்படி அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை அனுமந்த், தாலுகா அலுவலகத்திற்கு சென்று துணை தாசில்தார் அருண்குமாரை சந்தித்து ரூ.1½ லட்சத்தை வழங்கினார்.
துணை தாசில்தார் கைது
அப்போது அங்கு வந்த லோக் அயுக்தா போலீசார் அருண்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அருண்குமாரிடம் இருந்த ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்த லோக் அயுக்தா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.