மைசூருவில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு, சங்கு ஊதி போராட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைசூரு
காவிரி பிரச்சினை
தமிழகம் - கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது.
இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அ
துபோல் நேற்று மைசூருவிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெற்றியில் நாமம்
மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கர்நாடக சேனா படை மற்றும் கன்னட அமைப்பினர் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு, கைகளில் தட்டுகள் ஏந்தி அவற்றை தட்டியும், சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அவர்கள் தமிழகத்திற்கு எதிராகவும், கர்நாடகத்திற்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கன்னட அமைப்பின் தலைவர் தேஜஸ் கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜினாமா செய்தார்
கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. தற்போது இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்து விட்டால் கர்நாடக மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மறைந்தமுன்னாள் முதல்-மந்திரிபங்காரப்பா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிராகரித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் இருந்தார். அதுபோல் மத்திய மந்திரியாக இருந்த அம்பரீஷ், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் இன்றைய எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் தங்கள் பதவியை பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர். காவிரி விவகாரம் குறித்து அவர்கள் பேச மறுக்கிறார்கள்.
தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் காவிரி விவகாரத்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரசார் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தண்ணீர் திறந்து விடுகிறார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.