மணிப்பூரில் வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கைது


மணிப்பூரில் வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2024 12:09 PM IST (Updated: 20 April 2024 12:26 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயாததால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் நேற்றைய தினம் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரை பொறுத்தவரை, அங்குள்ள உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அப்போது மொய்ராங் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் வாக்குச்சாவடியில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இந்நிலையில், வாக்குச்சாவடி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story