மடிகேரியில்அரசு பஸ் மோதி ஜெனரல் திம்மய்யா சிலை சேதம்
மடிகேரியில் அரசு பஸ் மோதி ஜெனரல் திம்மய்யா சிலை சேதம் அடைந்துள்ளது.
குடகு
குடகு மாவட்டம் மடிகேரி சர்க்கிளில் மறைந்த ராணுவ வீரர் ஜெனரல் திம்மய்யாவின் நினைவாக அவரது திரு உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் குடகில் இருந்து மடிகேரியை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ஜெனரல் திம்மய்யாவின் சிலையின் மீது மோதியது.
இதில் ஜெனரல் திம்மய்யாவின் சிலை கீழே உருண்டு விழுந்தது. இதில் சிலை சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பஸ் டிரைவரான கோட்ரேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் எதிரே வந்த ஜீப் மீது மோதிவிடாமல் தடுக்க பஸ்சை திரும்பியபோது, சிலை மீது மோதியதாக தெரியவந்தது.
இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மடிகேரி சர்க்கிளில் இருந்த திம்மய்யாவின் சிலையை அங்கிருந்த அருங்காட்சியத்திற்கு மாற்றியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே இருந்த இடத்திலேயே ஜெனரல் திம்மய்யாவின் சிலையை வைக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.எல்.ஏ. மந்தர்கவுடா ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட மந்தர்கவுடா எம்.எல்.ஏ., சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.