குடகில் திருட்டு வழக்கில் கேரள வாலிபர் கைது
குடகில் திருட்டு வழக்கில் கேரள வாலிபரை போலீசாா் கைது செய்தனர்.
குடகு :-
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா கோனிகொப்பா போலீஸ் சரகத்திற்குட்பட்ட திதிமதி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கியாஸ் அடுப்பு, மின் மோட்டார், மிக்சி, பூஜை அறையில் இருந்த குத்துவிளக்கு உள்பட பல்வேறு பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து கார்த்திக் கோனிகொப்பா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர். இதேபோல மாயமுடி பகுதியில் பள்ளிகூடத்தின் பூட்டை உடைத்து சில பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்தும் கோனிகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் 2 இடங்களில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக நேற்று ஒருவரை கோனிகொப்பா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் சாவசேரி கிராமத்தை சேர்ந்த சாதிக் (வயது 47) என்பது தெரியவந்தது.
இவரிடம் இருந்து கியாஸ் அடுப்பு, மிக்சி, மின் மோட்டார், குத்துவிளக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள சாதிக்கின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.