சித்ரதுர்காவில் அசுத்த நீர் குடித்த மேலும் 2 பேர் சாவு
சித்ரதுர்கா மாவட்டம் காவடிகரஹட்டி கிராமத்தில் அசுத்த நீர் குடித்த சம்பவத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
சித்ரதுர்கா-
சித்ரதுர்கா மாவட்டம் காவடிகரஹட்டி கிராமத்தில் அசுத்த நீர் குடித்த சம்பவத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
அசுத்த நீர் குடித்தனர்
சித்ரதுர்கா(மாவட்டம்) டவுன் காவடிகரஹட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் அசுத்த நீர் குடித்த 58 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாததால் அருகே உள்ள அரசு பள்ளியில் தற்காலிக படுக்கைகள் அமைத்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மஞ்சுளா(20) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரகு(34) என்பவரின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவே அவர் உயிரிழந்தார்.
பரபரப்பு, பதற்றம்
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட பொறுப்பு மந்திரி டி.சுதாகர் உடனடியாக நேரில் சென்று அசுத்த நீர் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் முதல்-மந்திரி சித்தராமையாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி அங்கு நடந்த விஷயங்கள் குறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது அவரது காரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவரை சிறைபிடித்து அசுத்த குடிநீர் குடித்ததால் உயிரிழந்த மஞ்சுளாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
வாந்தி, வயிற்றுப்போக்கு
இதையடுத்து கிராம மக்களிடம் பேசிய மந்திரி டி.சுதாகர், இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையடுத்து கிராம மக்கள், மந்திரி டி.சுதாகரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் 20 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
இதனால் அவர்களும் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் மஞ்சுளா மற்றும் ரகு ஆகிய 2 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதி 76 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போராட்டம்
இதற்கிடையே நேற்று தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சுளாவின் உடலை வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அசுத்த நீரை வினியோகித்த குடிநீர் திறப்பு ஊழியரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஆத்திரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், குடிநீர் அதிகாரிகள் அலுவலகம் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதில் அவை இரண்டும் சேதம் அடைந்தன. இதற்கிடையே கிராம மக்களின் தேவைக்காக டேங்கர்கள் மூலம் கிராமத்தில் குடிநீர் வினியோகிக்கும் பணியும் நேற்று நடந்தது.
கிராம மக்கள் பீதி
இந்த நிலையில் காவடிகரஹட்டி கிராமத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தாவணகெரே மாவட்டம் வட்டரசித்தரஹட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்(வயது 25) என்பவர் வந்திருந்தார். அவரும் அசுத்த நீரை குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்த சுகாதார துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மக்கள் குடித்த குடிநீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் காவடிகரஹட்டி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.